Monday, September 20, 2010

Kandhar Alangaram--The Real beauty of few verses explained by TRS

அருணகிரி திருப்புகழ் பாடியிருக்காரு! அனுபூதி பாடியிருக்காரு! இன்னும் என்னென்னமோ
பாடியிருக்காரு! ஆனால் இந்தக் கந்தர் அலங்காரத்துக்கு மட்டும் ஒரு "இனம் புரியாத"
தனித்த பெருமை உண்டு! ஏன்-ன்னு உங்களுக்குத் தெரியுமா?


* திருப்புகழ் = தலம் தலமாக முருகனைக் கண்டு, உண்டு, வளர்த்துக் கொண்டார்! பயண
மிதப்பில், சந்தமும் முந்திக் கொண்டு வந்தது!
* அனுபூதி = வளர்த்துக் கொண்ட அன்பை, நிலை நிறுத்திக் கொள்ளப் பாடு-கிறார்!
பாடு-படு-கிறார்! அனுபூதி (அவனோடு என்றும் இருத்தல்) வேண்டப்படுகிறது!
* கந்தர் அலங்காரம் = ஆனால் வேண்டியது கிடைத்ததா? அன்பு "நிலை" கொண்டதா?? பதிவை
முடிக்கும் போது சொல்கிறேன்! :)
________________________________

அதற்கு முன்.....
அலங்காரத்தில் எனக்குப் பிடித்த, சில முக்கியமான பாடல்களைத் தந்து விடுகிறேன்!
உங்களுக்கும் பிடித்து விடும்-ன்னே நினைக்கிறேன்!

பல பாடல்கள் காதல் கைகூட, திருமணம் கைகூட, பரிந்துரைக்கப்படும் பரிகாரப்
பாடல்களாம்! (முன்னம் குறிச்சியில் சென்று கல்யாணம் முயன்றவனே)
ஹா ஹா ஹா! அம்மா, எதுக்கு கந்தர் அலங்காரதுக்கு, என் கிட்ட பொருள் கேட்டாங்க-ன்னு
இப்போ புரியுதா? ஹைய்யோ! ஹைய்யோ! :)

இவை தினமுமே ஓதவல்ல பாடல்கள்! அவ்வளவு சுவை!
இறைவனுக்காக அல்ல என்றாலும் கூட, தமிழ்
இனிமைக்காக ஓதவல்ல அழகிய பாடல்கள்!
இந்த அழகுக்கெல்லாம் அங்கே பொருள் சொல்ல முடியாமற் போனது! இருப்பினும் இங்கே...

(தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே)
நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

அஷ்டமி-நவமி, செவ்வாய்க் கிழமை, இராகு காலம்,
அடுத்தவன் வைத்த தீவினை, ஏவல்-சீவல்,
நான் கூப்பிடா விட்டாலும், எனைத் தேடிப் பிடிச்சி, "நாடி வரும்" நவ கிரகங்கள்,
இவ்வளவு பேரு கிட்டயும் மாட்டிக்காம, "இன்பமா" இருக்கணும்-ன்னு ஏகப்பட்ட
பரிகாரம்....
இறுதியாக வரும் கூற்றுவனாகிய எமன்! அவனுக்கு என்ன பரிகாரம்??? :)

* என் முருகன் எனக்கு இரு தாளைக் காட்டுகின்றான்! அதில் சிலம்பும் சலங்கையும் ஓம்
ஓம் என்று அவர்களுக்கு ஒலித்துக் காட்டுகின்றான்!
* என் முருகன் எனக்கு ஆறு முகம் காட்டுகின்றான்= முகம் பொழி கருணை!
அவர்களுக்கோ அவன் தோளைக் காட்டுகின்றான்= மல்லாண்ட திண் தோள்!

இப்படி எனக்குக் காட்டுவதெல்லாம் நான் அவனைக் கொஞ்ச!
அவர்கட்கு காட்டுவதெல்லாம் அவர்கள் அவனைக் கெஞ்ச! அஞ்ச!

உண்மை நிலவரம் இப்படி இருக்க, நான் எதற்கு நாள்-கிழமை-கிரகம்-ன்னு பயப்பட வேணும்?
அவன் தோளில் சூடிய கடம்ப மாலை! அது வெற்றி மாலை! அது எனக்கு முன்னே வந்து
தோன்றிடாதா என்ன? இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும்
கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
________________________________


ஆலுக்கு அணிகலம் வெண் தலை மாலை! அகிலம் உண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய்! மயில் ஏறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியும், கடம்பும், கையில்
வேலுக்கு அணிகலம் வேலையும், சூரனும், மேருவுமே!

* ஆல மரத்தின் கீழ் அமர்ந்தவர் சிவனார்! அவர் சூடு மிக்கவர்! அவருக்கு குளிர்ச்சி
தரும் வில்வம்! அவர் சூடிய மாலையோ மண்டையோட்டு மாலை!
* உலகம் உண்ட பெருவாயா - பெருமாள்! இவன் குளிர்ச்சி மிக்கவன்! இவனுக்கு,
சாப்பிட்டால் சூடு தரும் துளசி! ஆனால் வெளியில் தண்-ணென்று குளிர்ந்து இருக்கும்
துளசி மாலை!

மயில் ஏறும் என் ஐயன் முருகனுக்கோ, பலப் பல மாலைகள்!
* காலுக்கு = வானவர் கிரீடங்களே மாலை!
* தோளுக்கு = கடம்பப் பூ மாலை!
* கையில் வேலுக்கு = கடலும், மலையும், சூரனுமே மாலைகள்! அனைத்தும் வெற்றி மாலைகள்!
வெற்றிகளே மாலையாகி விழுந்த வேல் மாலைகள்!
________________________________

மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் ஆங்கு வாழ வைப்போன், வெய்ய வாரணம் போல்,
கை தான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே!

வண்டுகள் மொய்க்கும் மலர் வள்ளியை அவனும் மொய்ப்பான்! :)
உமை அன்னை கொஞ்சிடும் குற்றால மலை இலஞ்சி முருகன்! இலஞ்சி என்னும் குளத்தில் உதித்த

குகன்!இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சியில் அமர்ந்த பெருமாளே!

முத்தமிழால் திட்டினாலும், அச்சோ தமிழ் பேசுகிறானே என்று, ஆங்கே அப்போதே வாழ
வைப்பான்!
தாழப் பேசியவனுக்கும் வாழப் பேசுபவன் என் முருகன்!

யானை போல் மதம் கொண்ட, இருபது கை இராவணனை....பத்து தலையும் "கத்தரித்தான்" -
பேப்பரைக் கத்தரித்தால் எப்படி களேபரம் ஆகாமல், மென்மையாக, அதே சமயம் சரக் சரக்
என்று கத்தரித்து விடுமோ, அது போல் "கத்தரித்தானாம்"! - ஏன்?

வைதாரையும் வாழ வைப்பான் என்று இதற்கு முன்னடியில் சொல்லிவிட்டு, "அழித்தான்" என்றா

சொல்வது? அதான் "கத்தரித்தான்" என்கிறார்!

தையல்காரர் கத்தரிக்கும் போது பார்த்து இருக்கீங்களா? அய்யோ, காசு கொடுத்து வாங்குன

துணியை இப்படிச் சரக் சரக்-ன்னு வெட்டுறாரே-ன்னு இருக்கும்! :)
ஆனால் அப்பறம் தான் தெரியும் - கத்தரிப்பது துணியை அல்ல! உதிரிகளைத் தான் என்று!

பயனற்ற உதிரிகளைக் கத்தரித்தால் தான், பயனுள்ள ஆடை வரும்!
அது போல் "கத்தரித்த" பெருமாள்!
தையல் காரப் பெருமாள்! ஒரு தையல் காத்த பெருமாள்!
அந்தப் பெருமாளின் மருகன்! என் ஆசை முருகன்!

* வைத சூரனை வாகனம் ஆக்கி, இன்று நம்மையும் அந்த மயிலை(சூரனை) தொழ வைக்கிறான்!
* வைத இராவணனை வாயிற் காப்போன் ஆக்கி, இன்று நம்மையும் ஜய-விஜயர்களை(இராவணனை) தொழ
வைக்கிறான்!
இன்னும் ஒரு படி மேலே போய், இராவணனுக்குத் தன் சங்கு சக்கரங்களையும் கொடுத்து,
கருவறை வாயிலில், இன்று நம்மையும் அவனைத் தொழ வைக்கிறான்!

அருணகிரி பாடுவதோ: வைதாரையும் ஆங்கே "வாழ" வைப்பான்!
ஆண்டாள், நம் தோழி பாடுவதோ: சிறு பேர் அழைத்தனவும் சீறி "அருளாதே"!

இப்படி மாயோனும் சேயோனும் அருளே செய்கிறார்கள்!
"கத்தரித்து" விடுகிறார்கள்! வைதாரையும் ஆங்கே வாழ வைக்கிறார்கள்!
________________________________

இன்னும் சில கொஞ்சு மொழிப் பாடல்கள் இருக்கு...
ஆனால் அவை அத்தனைக்கும் பொருள் சொல்லாது,
பத்தி பிரித்து, பக்தி சேர்த்து, செல்கிறேன்!
பாட்டில், பத்தி பிரிச்சிட்டா, பக்தி வந்திடாதா? பொருள் வேறு சொல்லணுமா என்ன?

சேல் வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி
மால் வாங்கி ஏங்கி மயங்காமல், வெள்ளி மலை எனவே
கால் வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி, கழுத்தில் கட்டு
நூல் வாங்கிடாது, அன்று வேல் வாங்கி, பூங்கழல் நோக்கு நெஞ்சே!

(கழுத்தில் கட்டு நூல் - இந்திரன் மனைவிக்கு மாங்கல்ய பலமாகிய தாலி வரம் அளித்தது -

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று!)

படிக்கின்றிலை, பழநித் திரு நாமம் படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற் கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?

பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண்
சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை, கொற்ற மயூரம் என்கிலை, வெட்சி தண்டை
கால் என்கிலை, மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?

டேய், சும்மா ரோட்டோரம் அவளைப் பார்த்துவிட்டு, அவ உடம்பைப் பால்-ன்னு சொல்லுற,
பேச்சைப் பஞ்சு-ன்னு கொஞ்சற! கண்ணு மீன் மீன்-ன்னு சீன் போடும் நீ... மனம் போன
போக்கெல்லாம் போகும் நீ...

செந்திலோன் கை வேல்-ன்னு சொல்ல வாய் வரலை,
மயில்-ன்னு சொல்ல வாய் வரலை,
கொஞ்சும் சலங்கை இரு தாள்-ன்னு சொல்ல வாய் வரலை!
ஹைய்யோ மனமே! நீ எங்ஙனே முக்தி காண்பதுவே? :))

பரவாயில்லை! இனி அவளைக் கொஞ்சறதா இருந்தாலும்...சும்மா பஞ்சு மஞ்சு-ன்னு ஓவரா
அளக்காம,
அவள் கண், செந்திலோன் கை வேல் என்று சொல்லு!
அவள் நடை, செந்திலோன் மயில் என்று சொல்லு!
அந்த வேலும் மயிலுமே உனக்குத் துணையாகும்! முக்தி காண்பாய் நீ!
________________________________


விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!

இதுக்குப் பொருள் தேவையா என்ன? ஒரே ஒரு பொருள் தான்! பயந்த தனி வழிக்கு அவன் அருளே
பொருள்! அவனே பொருள்! அவனே பொருள்!

கண்ணிலே அவன் பாதங்கள் வந்து தோன்ற, வாயிலோ முருகாஆஆஆ என்னும் நாமங்கள் வந்து
தோன்ற...
முன்பு செய்த எத்தனையோ தவறுகளுக்கும், பாவங்களுக்கும் எத்தனை எதிரிகள் திரண்டு வரப்

போகிறார்களோ?
அவர்களை எதிர்கொள்ள என்னிரு தோளா? பன்னிரு தோளா?

நான் பயந்து போய், தனி வழியில் செல்லும் வேளை வந்து விட்டது!
உற்ற துணை எல்லாம் மற்ற துணை ஆகி விட்டது!

இனி யார் தான் துணை?
சிகராத்ரி கூறு இட்ட வேல் துணை! சிகை விரித்தாடும் அந்த மயில் துணை!
பகர் ஆர்வம் ஈ என்னும் அந்தச் செந்தமிழ் மொழியால்
முருகாஆஆஆ என்னும் பேரே துணை! அவன் பேரே துணை!

பயந்த தனி வழிக்கு - முருகன் துணை என்று சொல்லாது, எதுக்கு வேலும் மயிலும்
துணை-ன்னு சொல்லணும்?
* மயில் = சூரன் = ஆயிரம் தவறுகள் செய்து இருப்பினும், இன்று அவன் காலடியில்! அதே
போல் நாம் ஆயிரம் தவறுகள் செய்திருப்பினும்...என்று மயிலைக் காட்டுகிறார் -
Negative Inspiration!
* வேல் = ஞானம் = இருட்டு வழிக்கு ஒளி பாய்ச்சி, உடன் அழைத்துச் செல்வது! வேல் நம்
மீது பட்டு, நம்மையும் அவனிடம் மயிலாய் அடைவிக்கும் - Positive Inspiration!

அதான் பயந்த தனி வழிக்கு, இரண்டு Inspiration!
பயந்த தனி வழிக்கு, வேலும் மயிலும் துணை! வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

KRS in his blog Kandhar Alangaram excels in his explanation of the verses. Just great!!

No comments:

Post a Comment