முருகன் தந்தைக்கு உபதேசம் செய்தான்! எல்லாருக்கும் தெரியும்! ஆனா அவன் என்ன-ன்னு உபதேசம் செய்தான்? அது எல்லாருக்கும் தெரியுமா? அதே உபதேசத்தை அருணகிரிக்கும் பின்னாளில் செய்தானாம்! அருணகிரியே சொல்றாரு! முருகன் சொன்னான்-ன்னு சொல்றாரு, ஆனா என்ன சொன்னான்-ன்னு சொல்லாம கொஞ்சம் லொள்ளு பண்ணுறாரு! பார்க்கலாம் வாரீங்களா, இன்னிக்கி அலங்காரத்துல? :)
ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து, உச்சியின் மேல்
அளியில் விளைந்தது, ஒரு ஆனந்தத் தேனை, அநாதி இல்
வெளியில் விளைந்த, வெறும் பாழை பெற்ற, வெறும் தனியை
தெளிய விளம்பிய வா முகம் ஆறுடை தேசிகனே!
(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)
மேலோட்டமான பொருள்:
சிவ மயமான மலையின் மீதுள்ள ஆனந்த மயமான தேன்! - அதுக்குப் பேரு சிவானந்தம்!
முதல் முடிவு என்று இல்லாது, ஆனந்த வெளியாக விளங்கும் தனிமை நிலை! சும்மா இருத்தல்! அதை, ஆறுமுக தேசிகன் எனக்குத் தெளிவாக உபதேசித்தானே! என்ன ஆச்சரியமோ?
பாட்டைக் கொஞ்சமாப் பிரிச்சி மேயலாம்! இது தத்துவங்கள் நெறைஞ்ச பாட்டு! அதுனால கொஞ்சம் லைட்டாப் பிரிச்சி மேயறேன்! :)
மீதியை முருக பக்தர்கள், பின்னூட்டத்தில் விளக்கேற்றி விளக்குவார்கள்!
ஒளியில் விளைந்த = ஒளியில் என்ன விளையும்? ஒளியில் தான் உணவுக்கே உணவு விளையுது!
ஒளிச் சேர்க்கை - Photo Synthesis கேள்விப்பட்டிருக்கீங்க தானே அறிவியல் வகுப்பில்? செடி கொடிகள் எல்லாம் ஒளியில் தான் உணவு தேடிக் கொள்கின்றன!
செடிகளை விலங்குகள் உண்கின்றன!
விலங்குகளை மனிதன் உண்கிறான்!
மனிதனை?....
மனிதனை எது உண்கிறது?
அகங்காரம் உண்கிறது! ஹா ஹா ஹா! அடியேன் சொல்வது சரியா மக்களே? :)
உயர் ஞான பூதரத்து = உயர்ந்த ஞானமாகிய மலை! ஒளியில் விளைந்த ஞான மலை!
மலை எப்படிங்க ஒளியில் போய் விளையும்? கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க! ஆத்ம ஒளி - அதில் எழும்பும் ஞான மலை!
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றான் பாரதி!
ஆத்மாவில் சத்திய ஒளி, விளைய விளைய, ஞானம் என்னும் மலை மேலே மேலே எழும்புது!
இன்னும் ஈசியாப் புரிஞ்சக்கணுமா? எப்பவாச்சும் கொஞ்ச நாள் ஏதோ ஒரு சோகத்தில் இருந்து விட்டு, திடீர்-னு உங்களுக்கே ஒரு தெளிவு பிறந்திருக்கும் அல்லவா?
மனதில் தெளிவு-ன்னு ஒன்னு, விளைய விளைய, சிந்தனை மேலே மேலே எழும்புது!
ஆத்மாவில் சத்திய ஒளி, விளைய விளைய, ஞானம் என்னும் மலை மேலே மேலே எழும்புது!
உச்சியின் மேல் = அந்த ஞான மலையின் உச்சியில் மேல் என்ன இருக்கு?
அளியில் விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை = அளி-ன்னா கருணை! தமிழ் மொழியில் சொல்லும் பேரும் எப்படியெல்லாம் இருக்குன்னு பாருங்க!
கருணை இருந்தாத் தானே அளிக்க முடியும்? அதான் அளி-ன்னே கருணைக்குப் பேர் வச்சிருக்காங்க பண்டைத் தமிழ்ச் சான்றோர்!
இப்படி ஆத்ம ஒளியில், எழுந்த ஞான மலையின் மேல் என்ன இருக்கு? என்ன இருக்கணும்? ஞானமா? கர்மமா? பக்தியா? ஹிஹி....கருணை இருக்கணுமாம்!
நிறைய பேருக்கு, சாதகம் செய்யறேன் பேர்வழி-ன்னு ஆத்மா, ஞானம்-ன்னு எல்லாம் பேசிட்டு, அந்த மலையில் என்ன எழுப்பிக்கறாங்க?
ஆணவம், படோபடம், விளம்பரம், புகழ்ச்சி மாயை - இதெல்லாம் தான் ஏத்திக்கறாங்க!
எத்தனை "ஸோ கால்ட் ஸ்வாமி-ஜிக்களைப்" பார்க்கிறோம்! ஆனா கொஞ்ச நாள் தான்! பாரம் தாங்காம, கொஞ்ச நாள்-லயே மலை மீதிருந்து, அதல பாதாளத்திற்கு விழுந்துடறாங்க! அப்போது சாதாரண மக்களே, இந்த முன்னாள் சாதகர்களைக் கைத்தூக்கி விட வேண்டி இருக்கு! :)
ஆக, ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!
தான் நரகம் புகினும் பரவாயில்லை! அன்பர்களுக்கு மோட்சம் கிட்டினால் போதும் என்ற பரம கருணை! கேழில் பரங்கருணை! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் "கருணை"!
காரேய்க் கருணை இராமானுசா என்று அதான் கருணையை முன் வைத்து அவரைச் சொன்னார்கள்! பரம காருண்ய காரணத்தால் தான் யதி-ராசர், துறவிக்கெல்லாம் அரசர் என்று போற்றினார்கள்! அருட் பெரும் ஆத்ம சோதியில் தனிப் பெருங் கருணை இருக்கணும் என்று வள்ளலார் எம்புட்டு நுட்பமாச் சொல்லி இருக்காரு பாருங்க!
கருணை தான் ஞானியின், யோகியின், பக்தனின் பரம லட்சணம்!
ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!
அப்படிக் கருணை இருந்தால், தேன் விளையும்! அளியில் (கருணையில்) விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை என்கிறார் அருணகிரி! என்ன தேன்?
சிவானந்தம் என்னும் தேன்!
அம்பிகானந்தம் என்னும் தேன்!
முருகானந்தம் என்னும் தேன்!
மாலானந்தம் என்னும் தேன்!
அச்சுதானந்தம் என்னும் தேன்!
அத்தனையும் கிருபானந்தம் என்னும் தேன் தான்! கருணையே சிவம்! அன்பே சிவம்! காரேய்க் கருணை உடையவருக்குக் கருணையே பரமம் சிவம்!
அநாதி இல் வெளியில் விளைந்த = ஆதி=தோற்றம் x அநாதி=முடிவு! முடிவில்லாத வெட்ட வெளி = Cosmos. அம்பலவாணர் நடமிடும் வெளி! அங்கு என்ன தான் விளையும்?
வெறும் பாழை = வெற்றிடம் தான் விளையும்! அண்ட வெளியில் பாழ் என்னும் வெற்றிடம் தான் விளையும்! Vaccum! Volume of space that is empty of matter!
Quantum Theory உங்களுக்குப் படிக்கப் பிடிக்குமா? அவிங்களுக்கு இந்திய இறையியலில் அறிவியல் எப்படி எல்லாம் பின்னிப் படர்ந்து இருக்கு-ன்னு ஈசியாப் புரியும்!
பாழ் = கணிதத்தில் Zero என்பதை விட இங்கு Null என்று கொள்ளலாம்! நாதம் என்பார்கள்! நாத விந்து கலாதீ நமோ நம! ஒன்றுமில்லாத நிலை! கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க - அந்த "ஒன்றும்" இல்லாத நிலை என்பதில் "ஒன்று" இருக்கு அல்லவா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment